கோவில் மாநகரம்
இந்த வலைத் தளத்திலிருந்து வெளியாகும் வலைப் பதிவுகள் அனைத்தும் கோவில் மாநகரம் என்று பெருமையுடன் அழைக்கப் படுகின்ற மதுரை மாநகரிலிருந்து பிரசுரம் ஆகின்ற படியால் முதலாவது வலைப் பதிவு கோவில் மாநகரம் என தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் வெளியாகும் வலைப் பதிவுகள் வேறு வேறு தலைப்புகளில் வெளியாகும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.
உலகில் உள்ள ஐந்து கண்டங்களில் ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியாவில் தமிழ் நாட்டில் கோவில் மாநகரம் என்றழைக்கப்படும் மதுரை மாநகரம் உள்ளது.
கோவில்கள் அதிக எண்ணிக்கையிலான ஊர்கள் பல இருந்தும் இந்த ஊருக்கு மாத்திரம் இந்த சிறப்பு கிடைத்ததற்கு இந்த நகரத்தின் அமைப்பே காரணம்.
மதுரை மாநகரின் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இது ஒரு சிவன் கோவில் ஆகும். இருந்தாலும் இந்த ஸ்தலத்தில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு முதல் பூஜை செய்யப்படுவதால் முதலில் மீனாட்சி அம்மனை வழிபட்டு பின்னர் சிவனை வழிபாடு செய்வதால் இந்தக் கோவில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் என்று அழைக்கப் படுகின்றது.
கோவிலில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு மீனாட்சியம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் என்றழைக்கப்படும் சொக்க நாதர் இருவருக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன. கோவிலில் பொற்றாமரைக் குளம் உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலின் பரப்பளவு 15 ஏக்கர் ஆகும். வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தக் கோவிலில் மாத்திரம் 8 கோபுரங்களும் 2 விமானங்களும் இருக்கின்றன. இந்தக் கோவிலின் நீளம் 847 அடி அகலம் 792 அடி.
தமிழ் மாதங்களின் பெயர்கள் இந்த நகரத்தில் கோவிலைச் சுற்றி உள்ள வீதிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலின் உட்பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடிப் பாடி பஜனைகள் செய்து கொண்டு வருவதற்கு ஒரு பிரகாரம் உள்ளது. அந்த பிரகாரத்திற்கு ஆடி வீதி என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்கு சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என பெயர் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டியுள்ள வீதிகளுக்கு வெளி வீதி என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இது தவிர திருவிழாக் காலங்களில் தேரோட்டம் நடைபெறும். தேரின் வடத்தினை பக்தர்கள் இழுத்து வர தேரினை மாசி வீதியின் ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு திருப்ப முட்டுக் கட்டை பயன் படுத்தப் படுகின்றது. அவ்வாறான நேரத்தில் பக்தர்கள் நேராக வடம் பிடித்து இழுத்தால் தான் முட்டுக் கட்டை போட்டு தேரினை திசை திருப்ப முடியும். பக்தர்கள் வடத்தினை இழுத்தபடி நேராகச் செல்லும் சமயம் வடம் மட்டும் சில தெருக்களில் செல்லும். அவ்வாறு தேருக்கான வடம் மாத்திரம் போகும் தெருக்களுக்கு வடம் போக்கி தெரு என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. தேர் ஒரு திசையிலிருந்து வேறு திசைக்கு திருப்பப்பட்ட உடன் வடம் போக்கித் தெருவிலிலுந்து வடத்தினை மாத்திரம் மீண்டும் மாசி வீதிகளுக்கு இழுத்து வந்து திசை மாற்றி மீண்டும் தேரினை பக்தர்கள் இழுத்து வருவார்கள்.
வடம் போக்கித் தெரு என்று பெயரிடப் பட்டுள்ள தெருக்களில் திருவிழாக் காலங்களில் வடம் மட்டுமே போகும். தேர்கள் செல்லும் அளவிற்கு விசாலமாக இருக்காது. எனவே தான் அவ்வாறான தெருக்களுக்கு வடம் போக்கித் தெரு என்று பெயரிடப் பட்டுள்ளது.
திருவிழாக் காலங்களில் தேர் எந்த இடத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தி வைக்கப் படுகின்றதோ அந்த இடம் தேர் முட்டி என்று அழைக்கப் படுகின்றது.
இந்த நகரில் உள்ள தெருக்களை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கும் பணியாட்களை கண்காணிக்கும் நபர்கள் தங்குவதற்கு உருவாக்கப்பட்ட தெருக்களுக்கு மேஸ்திரி வீதிகள் என பெயரிடப்பட்டு கோவிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் உள்ளன.
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி தமிழ் மாதங்கள் பெயரில் தெருக்கள் மற்றும் வீதிகள் சதுர வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதால் தான்
மதுரை மாநகர்
“கோவில் மாநகரம்” என்ற பெருமையுடன் அழைக்கப் படுகின்றது