நரசிம்ம அவதாரம்
ஸ்ரீ யோக நரசிம்மர், ஒத்தக்கடை, மதுரை.
அச்சமயம் இரண்யனின் மனைவி கர்ப்பம் தரிக்கின்றாள். நாரத மாமுனிவர் பிரகலாதன் தன்னுடைய தாயின் வயிற்றில் கர்ப்பத்தில் இருக்கும் சமயம் ஸ்ரீமன் நாராயணன் என்றழைக்கப்படும் மகாவிஷ்ணு தான் ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதனை செய்கின்றார்.
அதே போல அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரண்யன் தான் கடவுள் என்று போதித்தார்.
தாயின் கருவில் இருக்கும் சமயம் இருவருடைய போதனைகளையும் கேட்ட பிரகலாதன் நாரதர் கூறிய ஸ்ரீமன் நாராயணன் தான் தமது கடவுள் என்று தீர்க்கமான முடிவினை எடுக்கின்றான்.
இரண்யகசிபு என்னும் கொடிய அரக்கனின் மகனாகப் பிறந்த குழந்தைக்குப் பிரகலாதன் எனப் பெயரிடுகின்றனர்.
இந்த பூவுலகில் பிறந்த பின்னர் பிரகலாதன் தமது கடவுள் ஸ்ரீமன் நாராயணன் தான் என்று கருதி எப்போதும் விஷ்ணுவின் நாமத்தையே உட்சாடனம் செய்து வருகின்றான்.
மகாவிஷ்ணுவை குல விரோதியாக நினைக்கும் இரண்யனுக்கு தமக்குப் பிறந்த மகன் பிரகலாதன் தமது நாமத்தை உச்சரிக்காமல் விஷ்ணுவின் நாமத்தையே உச்சரித்து வந்தது பிடிக்கவில்லை. எனவே பிரகலாதனை தமது நாமத்தை உச்சரிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து இரண்யன் பிரகலாதனை மாற்ற சாம பேத தான தண்டம் என பல விதங்களில் முயற்சி செய்து இரண்யனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.
அதனால் ஆத்திரமடைந்த இரண்யன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் தோல்வியடைகின்றான். அதன்படி பிரகலாதனை யானையின் காலால் இடரச் செய்தும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளுடன் அடைத்தும் விஷம் கொடுத்தும் எரிகின்ற அக்கினியில் இறங்கச் செய்தும் பலப்பல கஷ்டங்கள் கொடுத்த போதும் பிரகலாதன் விஷ்ணு பக்தனாக இருப்பதால் எப்போதும் மகாவிஷ்ணுவின் நாமத்தை உட்சாடனம் செய்து வருவதால் பிரகலாதன் மகாவிஷ்ணுவினால் காப்பாற்றப் படுகின்றான்.
அதன் பின்னர் பிரகலாதனை இரண்யனே கொல்ல முயற்சிக்கும் போது கூட பிரகலாதன் தனது தந்தையின் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் தந்தையின் கட்டளைக்குக் கீழ்படியாமல் மகாவிஷ்ணு தான் தம் கடவுள் என்பதில் உறுதியாக இருக்கின்றான்.
அப்போது இரண்யன் பிரகலாதனைப் பார்த்து நீ சொல்லும் அந்த கடவுள் எங்கு இருக்கின்றார் எனக் கேட்க பிரகலாதன் என்னுடைய ஹரி தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என மகாவிஷ்ணுவின் இருப்பிடத்தைச் சொல்கின்றான்.
உடனே நீ சொன்ன அந்தக் கடவுள் இந்தத் தூணில் இருப்பாரா எனக் கேட்டு அந்த தூணை உடைக்கும் பொழுது சிங்கத்தின் முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் அவதாரமாக இரண்யன் முன் தோன்றுகின்றார்.
அப்போது இரண்யன் தாம் சாகாவரம் பெற்று இருப்பதாவும் தம்மை அழிக்க முடியாது என்றும் சொல்கின்றான்.
உடனே நரசிம்ம அவதாரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு இரண்யனைத் தூக்கிச் சென்று வாசல்படியில் அமர்ந்தவாறு இரண்யனை வதம் செய்யும் சமயம் இரண்யன் பெற்ற வரங்களை தமது வாயால் சொல்லும்படி கேட்டுக் கொள்கின்றார்.
இரண்யன் பெற்ற வரங்களும் நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு வின் விளக்கங்களும்.
இரண்யன்: எனது உயிர் பகலிலும் போகக் கூடாது இரவிலும் போகக் கூடாது
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு: தற்சமயம் இரவும் அல்ல. பகலும் அல்ல. அந்தி சாயும் நேரம்
இரண்யன்: நான் வீட்டிலும் சாகக் கூடாது வெளியிலும் சாகக் கூடாது
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு:
நாம் வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட வாசற்படியில் தான் இருக்கின்றோம்..
இரண்யன்: நான் மனிதனாலும் சாகக் கூடாது மிருகத்தாலும் சாகக் கூடாது
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு:
நான் மனிதனும் அல்ல. மிருகமும் அல்ல. சிங்கத்தின் தலையும் மனிதனின் உடலும் கொண்டுள்ளேன்.
இரண்யன்: நான் தரையிலும் சாகக் கூடாது வானத்திலும் சாகக் கூடாது.
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு:
நீ தற்போது படுத்திருப்பது தரையிலும் அல்ல. வானத்திலும் அல்ல. என்னுடைய மடியில்.
இரண்யன்: நான் சாகும் சமயம் என்னுடைய இரத்தம் தரையில் படக் கூடாது
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு:
உன்னை வதம் செய்த பின்னர் உன்னுடைய இரத்தத்தை தரையில் சிந்த விடாமல் நானே குடித்து விடுவேன்.
இரண்யன்: என்னுடைய உயிர் எந்த வித ஆயுதங்களாலும் போகக் கூடாது.
நரசிம்ம அவராரம் எடுத்துள்ள மகாவிஷ்ணு:
என்னுடைய கைகளில் எந்த வித ஆயுதங்களும் இல்லை. நான் என்னுடைய கூறிய நகங்களைக் கொண்டு உன்னை வதம் செய்ய இருக்கின்றேன்.
நரசிம்மர் இரண்ணன் பெற்ற சாகா வரங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டிய பின்னர் இரண்யனை வீட்டின் வாசலில் அமர்ந்தபடி மிருகம் பாதி மனிதன் பாதி என்னும் உருவத்துடன் அந்தி மாலைப் பொழுதில் ஆகாயத்திலும் இல்லாமல் தரையிலும் இல்லாமல் தன்னுடைய மடியில் படுக்க வைத்துக் கொண்டு எந்த விதமான ஆயுதங்களையும் உபயோகப்படுத்தாமல் தன்னுடைய கூரிய நகங்களைக் கொண்டு இரண்யனை அவன் பெற்ற வரங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டியபின்னர் இரண்யனை வதம் செய்கின்றார்.
பிரகலாதன் மகாவிஷ்ணுவின் மீது கொண்டுள்ள தீவிர பக்தியினால் ஸ்ரீமன் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனை அழித்து பிரகலாதனைக் காப்பாற்றுகின்றார்.