நளன் தமயந்தி
மகாபாரதத்தில் வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 வரை நளன் மற்றும் தமயந்தியிடையே ஏற்படுகின்ற காதல். திருமணம், சூதாட்டம் சொத்தினை இழத்தல், வனவாசம் செல்லுதல், மனைவியைப் பிரிதல் போன்ற சோதனைகளுக்குப் பின்னர் மீண்டும் ஒன்று சேரும் கதை தான் நள தமயந்தியின் கதை ஆகும்.
நிடத நாட்டின் அரசன் நளன். நளன் ஒரு நாள் சோலை வனத்தில் வலம் வரும் சமயம் அழகான அன்னங்களைப் பார்க்கின்றான். அவைகள் மீது பற்றுக் கொண்டு அவைகளை துரத்திச் சென்று அவற்றில ஒன்றினை தமது கரங்களால் பிடிக்கின்றான். அப்போது நளன் கைகளில பிடி பட்ட அன்னப்பறவை விதர்ப நாட்டின் இளவரசி தமயந்தியின் அழகைப் பற்றியும் அவளது குணநலன்கள் பற்றியும் சொல்லி விட்டு தமயந்திக்கு சுயம்வரம் நடக்க இருக்கின்றது. எனவே தாங்கள் விதர்ப நாட்டிற்குச் சென்று சுயம் வரத்தில் கலந்து கொண்டு தமயந்தியை மணமுடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றது.
அதே போல விதர்ப நாட்டின் இளவரசி தமயந்தியும் அன்னப்பறவைகளைப் பார்த்து அவற்றில் ஒன்றினை பிடித்த சமயம் அந்த அன்னப்பறவை நிடத நாட்டின் அரசன் பற்றியும் அவனது அழகு பற்றியும் அவனது வீரம் பற்றியும் அவனது சமையல் பற்றியும் தெரிவித்து சுயம்வரத்தின் போது நளனும் கலந்து கொள்வார் எனவும் நளனை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றது. அதோடு நிடத நாட்டின் இளவரசன் நீரும் நெருப்பும் இன்றி சுவையான உணவுகள் சமைப்பதில் அவருக்கு நிகர் எந்த உலகத்திலும் இல்லை என்றும் சொல்லி விடுகின்றன. இதன் படி தற்போது திருமணத் தரகர்கள் செய்து வரும் பணியினை அன்னப் பறவை செய்துள்ளது என்பது அறிய முடிகின்றது.
விதர்ப நாட்டின் இளவரசி தமயந்தி அழகானவள் வசீகரமானவள் மற்றும் நல்ல பண்புகள் கொண்டவள் என்பதால் அனைத்து நாட்டு அரசர்களும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள ஆசையுடன் வருகின்றார்கள்.
அதே போல தமயந்தியின் சுயம்வரம் பற்றி தேவதைகள் மூலம் அறிந்து கொண்ட தேவர்களான இந்திரன், வருணன், வாயு பகவான் மற்றும் அக்னி பகவான் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வேண்டிக் கொள்ள நளனை தூதுவராக அனுப்பி வைக்கின்றனர்.
தேவர்கள் பேச்சினை மறுக்க முடியாத நளன் அவர்கள் சார்பாக தமயந்தி முன்னர் ஒரு வக்கீலாக ஆஜராகி இந்திரன், வருணன், வாயு மற்றும் அக்னி ஆகிய நால்வரில் ஒருவரை சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றார். தேவர்கள் தமக்குக் கொடுத்த பணியினை நிறைவேற்றி விட்டதாக தேவர்களிடத்தில் தெரிவித்து சுயம்வரத்தின் போது தேவர்களிடையே தாமும் அமர்ந்து கொள்கின்றார். ஆனால் ஒரு ஆச்சர்யம் நான்கு தேவர்களும் நளன் உருவத்திலேயே அரசவையில் அமர்ந்து இருந்தனர். தேவர்கள் நளன் போன்றே உருவத்தில் வந்து சுயம்வரத்தில் கலந்து கொண்டதால் தற்போது நீதி மன்றங்களில் சொல்லப்படும் ஆள் மாறாட்டம் அவை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்கள் அந்த காலத்திலேயே இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது
நளனை சுயம்வரத்திற்கு முன்னரே எதிர்கால மணமகனாக தமயந்தி முடிவு செய்து விட்ட போதிலும் நான்கு தேவர்களும் நளனும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்ததால் யாரைத் தேர்வு செய்வது என்று குழம்பிய சமயம் தனது இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அதன் பின்னர் யாருக்கு வியர்க்கின்றதோ யாருடைய கண்கள் இமைக்கின்றதோ அவர் தான் நளன் என்று கண்டுபிடித்து தனது கைகளில் இருந்த மாலையை உண்மையான நளன் கழுத்தில் அணிவித்து நளனை மணாளனாக ஏற்றுக் கொள்கின்றாள்.
ஒரே மாதிரியான உருவம் கொண்ட ஐந்து நபர்களிலிருந்து நளனை அடையாளம் தெரிந்து கொள்ள தமயந்தி இறைவனிடம் பிரார்த்தித்தல்
தேவர்கள் சுயம்வரத்திற்கு வந்திருந்த போதிலும் தமயந்தி நளனை மணாளனாகத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொண்டதை விரும்பாத ஒரு து{ர் தேவதை (காளி) நளனிடத்தில் ஏதேனும் குறைகள் கண்டுபிடிக்கக் காத்திருந்து குறைகள் எதுவும் கண்டு பிடிக்க முடியாமல் நளன் தமயந்தி ஆகிய இருவரும் 12 ஆண்டுகள் மிகச் சந்தோஷமான வாழ்க்கை வாழந்து வரும் வேளையில் நளனுக்கு சனி பிடிக்க நளன் புஷ்கரன் என்னும் அரசனிடம் சூதாட்டம் ஆடி நாட்டை இழந்து வன வாசம் செல்ல நேரிடுகின்றது. அப்போது தமயந்தியும் தாம் கூட வருவேன் என வனவாசம் செல்கின்றாள்.
அப்போது தமயந்தி தம்முடன் வனவாசத்தில் கஷ்டப்படுவதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை கொண்ட நளன் தமயந்தியை பிரிந்து சென்று விடுகின்றான்.
தமயந்தி தமது பெற்றொர் அரண்மனைக்கு திரும்பி விடுகின்றாள்.
தமயந்தியை தனியே விட்டுச் சென்ற நளன் கார்க்கோடகன் என்னும் பாம்பினைக் காப்பாற்றிய காரணத்தால் நளனுக்கு கருப்பான உருவத்தை அளித்து தாம் விரும்பினால் எந்த நேரத்திலும் சுய உருவத்திற்கு மாறுவதற்கு ஒரு மந்திர மாலையை பரிசளித்து மறைந்து விடுகின்றது.
கருமை நிறத்தில் அடையாளம் தெரியாதபடி இருந்த நளன் அயோத்தியில் உள்ள ரிதுபமா என்னும் அரசனிடம் சமையல் காரனாகவும் தேரோட்டியாகவும் பணியில் சேர்ந்து கொள்கின்றான்.
அச்சமயம் தமயந்திக்கு மீண்டும் ஒரு சுயம்வரம் என்று கேள்விப்பட்டு ரிதுபமா எனும் அரசன் நளனை தேரோட்டியாக வைத்துக் கொண்டு மிக வேகமாக நளன் தேரினைச் செலுத்தி வரும் சமயம் அரசன் தமது தேரோட்டியான நளனிடம் தமது மேலாடை கீழே விழுந்து விட்டது எனக்கூறிய அடுத்த நொடியில் நளன் அரசனைப் பார்த்து தேர் நாலாறு காத தூரம் வந்து விட்டது. மேலாடையை எடுக்க திரும்ப சென்றால் சுயம் வரம் முடிந்து விடும் எனக்கூறி நேராக வந்து விடுகின்றான். காதம் என்றால் மலையாள மொழியில் 16 கிலோமீட்டர் அதாவது 10 மைல்கள். நாலாறு காத தூரம் என்றால் 384 கிலோமீட்டர் தூரம் அல்லது 240 மைல்கள். ஒரு மேலாடை விழுந்து எடுத்து விடலாம் என்று சொல்லிய உடன் சற்று நேரத்தில் கடந்து வந்த பாதை 384 கிலோ மீட்டர்கள் என்றால் தற்போது உலகிலேயே அதிக வேகத்தில் இயங்கிவரும் புல்லட் டிரையினைக் காட்டிலும் அதிகமான வேகம் என்று பொருள். நளன் ஓட்டி வந்த வேகம் கொண்ட தரை வழிப் போக்கு வரத்து சாதனம் இன்னமும் இந்த நவீன உலகில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.