சங்கு சக்கரம்
திருவிழிமிழலை என்னும் ஊரில் இருந்த ஒரு சிவ பெருமான் திருத்தலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தார்.ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களுக்குப் பதிலாக 999 மட்டுமே இருந்தது. ஒன்று குறைவாக இருந்தது.
ஒரு தாமரை குறைவாக இருந்ததை அர்ச்சனையின் சமயம் கண்டு கொண்ட விஷ்ணு அந்த ஒரு தாமரைக்குப் பதிலாக தமது கண்களில் ஒன்றினை தாமரையாக்கி அதனையும் சேர்த்து அர்ச்சனை செய்து தமது அர்ச்சனையை முடித்தார்.
ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்த போது தனது கண்ணையே தாமரையாக்கி பூஜை செய்ததைக் கண்ட சிவபெருமான் மனமகிழ்ந்து சக்ராயுதத்தினை வழங்கியதாக திருவவிழிமிழலை தல புராணம் கூறுகின்றது,
இதற்கு சுதர்சன சக்கரம் என்னும் பெயரும் உண்டு. சமஸ்கிருத மொழியில் சு என்றால் நல்ல புனிதமான என்றும் தர்சனம் என்றால் காண்பது அல்லது வழிபாடு செய்வது என்றும் பொருள்.
சங்கு சக்ரதாரியென அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணர் தமது இரண்டு கரங்களிலும் வலம்புரி சங்கினையும் சக்கரத்தையும் தாங்கி இருக்கின்றார்.
மகாபாரதத்தில் அர்ஜூனன் மகன் உயிரிழப்பதற்கு ஜெயத்ரதனன் காரணமாக இருக்கின்றான். எனவே அர்ஜூனனை மகாபாரத போரில் கொல்ல துரோணர் 3 வரிசைகள் கொண்ட வியூகம் அமைத்து ஜெயத்ரதனை காக்க முயல்கின்றார். மகாபாரத போர் விதி முறைகளின் படி சூரிய உதயத்திற்கு பின்னர் யுத்தம் ஆரம்பித்து சூரிய அஸ்தமனம் ஆனவுடன் போரினை முடிவுக்கு கொண்டு வந்து மறு நாள் தான் மீண்டும் போரிட ஆரம்பிக்க வேண்டும். ஜெயத்ரதனன் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அந்த வியூகத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரையில் வெளியில் வராமல் துரோணர் பாதுகாப்பது ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குத் தெரிய வரவே தம்மிடம் இருந்த சக்கரத்தினால் செயற்கையாக சூரியனை மறைத்து சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்டது என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி ஜெயத்ரதனை வியூகத்திலிருந்து வெளி வர வைத்து வெளியில் வந்தவுடன் ஜெயத்தரனை அர்ச்சுனன் கொல்கின்றான். எனவே ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்த சக்கரம் சூரியனையே அஸ்தமிக்க வைத்தது போன்ற தோற்றத்தை உருவாக்க ஒரு ஆயுதமாக உபயோகப் படுத்தப்பட்டது. சக்ராயுதம் என்பது மிக வேகமாக ஆனால் எவ்வித சப்தமும் இல்லாமல் குறிப்பிட்ட இலக்கிற்குச் சென்று தாக்கவல்ல ஆயுதமாகும்.
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும் துரியோதன் படைகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தின் போது போரினை காலையில் துவக்கி வைக்கவும் மாலையில் முடிக்கவும் சங்கினை ஒலி எழுப்ப ஸ்ரீ கிருஷ்ண பகவான் உபயோகித்தார்.
சங்கொலி முறை தற்போது பெரிய பெரிய ஆலைகளில் ஒவ்வொரு ஷிப்ட் முடியும் பொழுதும் அடுத்த ஷிப்ட் ஆரம்பிக்கும் பொழுதும் ஒரு நோயாளியை அவசரமாக ஆம்புலன்சில் உயிர் காக்கும் பொருட்டு அழைத்துச் செல்லும் சமயத்திலும் தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விரைவாகச் செல்லும் வாகனங்களில் ஒலியெழுப்பி வேகமாகச் செல்லவும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் சமயம் ஒலியெழுப்பி முன்னெச்சரிக்கை செய்து பொது மக்களைக் காக்கவும் பெரிய பெரிய கட்டிடங்களில் பேரிடர் ஏற்படும் சமயங்களிலும் சங்கொலி போன்று ஒலிக்கச் செய்யும் முறையானது மகாபாரத காலத்திலேயே உபயோகத்தில் இருந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.